ஒரு நினைப்பை பிரயானத்தின் போது நினைத்தால் அதன் போக்கே தனி. மனிதனின் தீர்க்கமான கூரான நினைவுகள், திட்டங்கள் எல்லாம் அவனுடைய ஏதாவதொரு பிரயானத்தின் போது தான் உருவாகின்றன போலும். பிரயானத்தின் போது வருகிற சிந்தனைகள் வைகறையின் பனி புலராத மலர்களைப் போல் புதுமையாகவும் பொலிவாகவும் அமைகின்றன.


- நா. பார்த்தசாரதி (நெற்றிக்கண்)

வாழ்க்கையின் சௌகரியங்களுக்குத் தன்னை வளைத்துக் கொள்ளாமல் நம்முடைய அசௌகரியங்களுக்கு ஏற்றபடி வாழ்க்கையை வளைத்துக் கொள்ள வேண்டும். 


- நா. பார்த்தசாரதி (நெற்றிக்கண்)

ஒரு சொல்லுக்கு இரண்டு ரூபங்கள் உண்டு. சொல் தனக்குத்தானே ஒரு வடிவம். இரண்டாவதாக சொல் தன்னால் குறிக்கப்படுவது எதுவோ அதுவாக மாறிக் கருவியாக நின்று அதையே உணர்த்துவது மற்றொரு வடிவம். பார்க்கப்போனால் இந்த இரண்டு வடிவமும் வேறு வேறல்ல. ஒன்றே மற்றொன்று.ஒன்றிலிருந்து மற்றொன்று. ஒன்றாயிருந்தது மற்றொன்று.

- நா. பார்த்தசாரதி (நெற்றிக்கண்)
பக்தியின் காரணமாக ஏற்படுகிற பயத்தையாவது ஒப்புக் கொள்ளலாம். வெறும் பயத்தின் காரணமாக மட்டுமே ஏற்படுகிற பக்தியை ஒப்புக் கொள்ள முடியாது.

- நா. பார்த்தசாரதி (சுந்தரக் கனவுகள்)
சாதாரன மனிதர்களின் வேதனைதான் அவர்களுடைய தவம். எல்லோரும் தவம் செய்யக் காட்டுக்குள் போய் விட முடியாது. பலருக்கு அவர்கள் படுகிற வேதனைகளும் துக்கங்களும் அடைய வேண்டியதை அடைவிக்கிற தவமாக இருக்கும்.- நா. பார்த்தசாரதி (நெற்றிக்கண்)
அன்பினால் மனிதர்களை ஓற்றுமைப்படுத்த பல நாள்களாகும் என்றால், பொறாமையால் அவர்களைப் பிரித்துவிட மிகச்சில விநாடிகளே போதுமானது. 


- நா. பார்த்தசாரதி (சுந்தரக் கனவுகள்)

எவன் ஒருவன் தன்னைத் தூய்மையானவனாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறானோ, அவன் காமத்திலிருந்தும், மற்றும் சரீர வாழ்க்கையின் சம்பந்தமான ஆசாபாசங்களில் இருந்தும் விடுபடல் வேண்டும். அந்த ஒழுக்க தூய்மையின் பொருட்டு, செல்வத்தையும், அதிகாரத்தையும், அவன் துறக்க தயாராக இருத்தல் வேண்டும்.


- ஜெயகாந்தன் (இமயத்துக்கு அப்பால்)

ஒரு வசதி இல்லாமல் போவதை விட, அந்த வசதி கிடைக்காமல் ஏமாற்றப் படுவது மோசமானது. அடக்குமுறையின் அடையாளம் ஏமாற்றுவது என்றால், அடிமைத்தனத்தின் முதல் அடையாளம் ஏமாறுவதுதான். 


- நா. பார்த்தசாரதி (சுந்தரக் கனவுகள்)
ஒரு காரியத்தை முதலில் செய்து விடுவது எத்தனை பெரிய சிரத்தையோ அத்தனை பெரிய சிரத்தைதான், அதைக் கடைசியில் செய்வதற்காகத் தனியே மீதம் வைத்திருக்கோம். கடைசியாக செய்ய வேண்டுமென்று பிரித்து ஒதுக்கி வைப்பதாலேயே சில காரியங்களுக்கு முதன்மையும் முக்கியமும் சிரத்தையும் உண்டாகிவிடுகிறது.

- நா. பார்த்தசாரதி (நெற்றிக்கண்)
வசதி உள்ளவர்களின் கேவலங்கள் சகித்துக்கொள்ளப்படும் அதே சமயத்தில், வறுமையாளர்களின் கேவலங்களை அருவருப்போடு பார்க்கிற உலகம் இது.

- நா. பார்த்தசாரதி (சுந்தரக் கனவுகள்)
நம்மை தொடர்ந்து யோக்கியர்களாக வைத்துக் கொள்ள வேண்டுமானால், நாம் அயோக்கியர்களை விரோதித்து கொள்வதை தவிர்க்கவே முடியாது - கூடாது.

- நா. பார்த்தசாரதி (சுந்தரக் கனவுகள்)
இங்கு எதுவும் படிக்காத பாமரர்களை ஒன்று சேர்ப்பது கூட சுலபம். நன்கு படித்தவர்களையும், அரை குறையாய் படித்தவர்களையும் ஒன்று சேர்ப்பது தான் இந்நாட்டில் மிகவும் சிரமமான காரியம்.


- நா. பார்த்தசாரதி (சுந்தரக் கனவுகள்)
தவறுவதும், தவற நேர்வதும் ஒன்றில்லை. தவறுகிறவர்களைத் திருத்துவது கடினம். தவற நேர்கிறவர்களை மன்னிக்கலாம்; மன்னிக்க முடியும்.


- நா. பார்த்தசாரதி (சுந்தரக் கனவுகள்)
ஏழைகளும், மத்தியத்தர குடும்பத்தினரும்தான் பிரதிபலன் பாராமல் அன்புக்காகவும் உபசாரத்துக்காகவும் மனிதர்களைப் போற்றவும், விருந்து வைக்கவும், புகழவும் செய்கிறார்கள்.


- நா. பார்த்தசாரதி (நெற்றிக்கண்)
படித்தவர்கள் எல்லாம் பண்பட்டவர்களாகவோ; பண்பட்டவர்கள் எல்லாம் படித்திருப்பவர்களாகவோ தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.


- நா. பார்த்தசாரதி (சுந்தரக் கனவுகள்)
மனித குலம் அனைத்தும் இயற்கைத் தாயின் குழந்தைகள். இயற்கையின் முன் மனிதர் யாவரும் சமம். அன்பாய் இரு. பெருந்தன்மையாய் இரு. கடின உழைப்பை மேற்கொள். அறிவையும் இயற்கையின் அருளையும் வழிபட்டு ஒழுகு. உன்னை தூய்மை படுத்திக் கொள். அப்போது நீ ஞானத்தை அடைவாய்.


- ஜெயகாந்தன் (இமயத்துக்கு அப்பால்)
உலகத்தை ஏமாற்றுவதை விட கேவலமான் காரியம் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதுதான்.


- நா. பார்த்தசாரதி (நெற்றிக்கண்)
சமூகத்துக்கு ஒருவனால் நன்மை இருக்குமானால், அவனுடைய தனிப்பட்ட விஷயங்களில் நாம் கொஞ்சம் தாராளம் காட்டுவதில் தவறில்லை. இதனால் மேதைகளுக்கு ஒழுக்கம் தேவையில்லை என்று பொருளில்லை. மேதைகளிடத்தில் அதை ஓர் அளவு கோலாகப் பயன் படுத்த வேண்டாம்.


- ர. சு. நல்லபெருமாள் (எண்ணங்கள் மாறலாம்)
ஒரு கட்டுப்பாடு, திட்டம் எக்காரணத்தால் ஏற்பட்டதாயினும் அது மனிதருக்கு நல்லதே. அதோடு இப்படிப்பட்ட சோதனைகளில் ஈடுபடுத்திக் கொள்வது வாழ்வில் நமது தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ஒரு தார்மீக ஆதாரமாய் அமையும்.


- ஜெயகாந்தன் (இமயத்துக்கு அப்பால்)
நமக்குப் பிடிக்காத உண்மைகள் பொய்கள் ஆகிவிடுவதில்லை. நமக்குப் பிடித்த பொய்கள் உண்மைகளாகி விடுவது இல்லை. ஆசைகள் நமக்குரியவை ஆனால் விளைவுகள் அப்பாற்பட்டவை. மனிதனுடைய சோகம் ஆரம்பமாகிற எல்லை ஆசைக்கும் விளைவுக்கும் நடுவே இருக்கிறது.


- நா. பார்த்தசாரதி (நெற்றிக்கண்)
“WORD PICTURE” என்பார்களே அதுபோல ஒரு வார்த்தையும் அதன் உருவமும் சேர்ந்தே நினைவு வருகிற நினைவு, சக்தி வாய்ந்த நினைவு ஆகும்.


- நா. பார்த்தசாரதி (நெற்றிக்கண்)
போர் வீரனின் தைரியம் வேறு. அறிவாளிக்கு தேவையான தைரியம் வேறு. அறிவாளியின் தைரியம் சத்தியத்தை அடிப்படையாகக் கொண்டு மடங்காத தைரியமாக இருக்க வேண்டும். சமூகத்தின் எந்த மூலையிலிருந்து யாருடைய நெற்றிக்கண் கொடுராமாக திறந்து வெதுப்பினாலும் ‘குற்றம் குற்றமே’ என்று நிமிர்ந்து நின்று சொல்கின்ற தைரியமே அறிவாளியின் தைரியம்.


- நா. பார்த்தசாரதி (நெற்றிக்கண்)
மனிதனுக்கு உண்மையான வலுவுள்ள கருவி கத்தியும் துப்பாக்கியும் அல்ல. தன்னுடைய நினைப்பும், பேச்சும் செய்கையும் நேர்மையானவை என்று தனக்குள் தானே நம்பி உணர்ந்து பெருமைப்படுகிற பெருமிதம் தான் அவனுடைய மெய்யான வலிமை.


- நா. பார்த்தசாரதி (நெற்றிக்கண்)
வீரனை அவன் அறிய அலட்சியம் செய்கிறவன் தன்னுடைய அலட்சிய சொற்களாலேயே அவனுடைய பலத்தைப் பல மடங்கு பெருக்கி விட்டு விடுகிறான்.


- நா. பார்த்தசாரதி (நெற்றிக்கண்)
நம்முடைய அறிவு புரிந்துகொள்ளாத விஷயங்கள் அனைத்தையும் கடவுள் தத்துவத்தோடு இனைத்து விடுவதே நம்முடைய பழக்கமாகிவிட்டது.


- ர. சு. நல்லபெருமாள் (எண்ணங்கள் மாறலாம்)
மற்றவர்கள் மீது பொதுப்படையாக ஏற்படும் அபிமானத்துக்கு மேலாக ஒரு குறிப்பிட்ட நபர் மீது மனம் தீவிரமாக ஈடுபட வேண்டுமானால்  அந்த நபரிடம் ஏதாவது ஒரு சிறந்த அம்சத்தை நாம் உணர்ந்திருக்க வேண்டும்.


- ர. சு. நல்லபெருமாள் (எண்ணங்கள் மாறலாம்)
அன்பைப் போலவே நம்பிக்கையும் தைரியத்தை ஆதாரமாகக் கொண்டது. வீரத்தையும் அஞ்சாமையுங் கொண்டு ஒருவன் தனக்குள்ளே சொல்லிக் கொள்ள வேண்டும். “நான் நம்புகிறேன். ஆம் நான் நம்புகிறேன்” என்று. பிறகு எல்லாம் நாம் விரும்பிய வண்ணமே வந்து நிற்கும். நீ ரொம்ப விஷயங்களின் மீது அன்பு செலுத்துகிறாய். அந்த அன்பின் ஆழத்தில் விளைவதே நம்பிக்கை. வெறும் அன்பில் இருந்து நம்பிக்கை உறுதியாக மலர வேண்டும் என்றால், மேலும் அழ்ந்த அன்பு செலுத்த நீ கற்று கொள்ள வேண்டும்.


- ஜெயகாந்தன் (இமயத்துக்கு அப்பால்) 
பொது சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள் விலையுயர்ந்த வெகுமதிகளை ஏற்றுக் கொள்ளவே கூடாது.


- ஜெயகாந்தன் (இமயத்துக்கு அப்பால்) 
தேடுங்கள் ! எப்போதும் தேடிக்கொண்டே இருங்கள்.


- ஜெயகாந்தன் (இமயத்துக்கு அப்பால்) 
அறிவாளி அறிந்து கொள்வதற்காகவும் அறிவற்றவன் அலட்டி கொள்வதற்காகவும் பயில்கிறான்.


- ஜெயகாந்தன் (இமயத்துக்கு அப்பால்) 
பகலில் செய்கின்ற வேலையின் பயன் இரவில் உனக்கு அமைதியான உறக்கத்தை அளிக்க வேண்டும். இளமையில் நீ செய்கிற காரியங்கள் முதுமையில் உனக்கு அமைதியையும் ஆனந்தத்தையும் தர வேண்டும்.


- ஜெயகாந்தன் (இமயத்துக்கு அப்பால்)