சாதுரியமான குறுக்கு வழியில் வெற்றி பெறுவதை விட நிதாமான அறவழியில் வெற்றி பெறுவது சிறந்தது.

- நா. பார்த்தசாரதி (சிந்தனை மேடை)
அற்ப மனிதர்களுடன் பேச்சுச் சல்லாபம் வைத்துக் கொள்வதைக் காட்டிலும் மௌன விரதம் மேலானது. 


- வ.ரா (மகாகவி பாரதி)

தந்திரத்தால் ஏமாற்ற முயற்சி செய்யாதே; எப்போதும் நேர்மையாகவே தற்காப்பு தேடிக்கொள். தந்திரத்தை நீ கையாண்டால், உன்னைவிட வல்லவர்களின் தந்திரத்திற்கு பலியாகிவிடுவாய்.

- மு. வரதராசன் (கள்ளோ ? காவியமோ)
மனிதனுக்கு தருமசங்கட நிலைமை ஏற்படுவது என்றால், இப்படித்தான் ஏற்படும். கடமை, இரண்டு அம்சங்களாகக் கண்ணில் தோன்றும். அவை ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதவை போலவும் தோன்றும். எதைத் தள்ளுவது, எதைக் கொள்ளுவது என்பதில் தான் தருமசங்கடம்.

- வ.ரா (மகாகவி பாரதி)

மனிதன் ஆபத்தினால் அநேகமாய் சாவதில்லை. ஆபத்து வருமே என்று எண்ணியெண்ணி, ஆபத்து வருவதற்கு முன்னே முக்கால் பங்கு இறந்து போய் விடுகிறான்.


- வ.ரா (மகாகவி பாரதி)

ஒரு நினைப்பை பிரயானத்தின் போது நினைத்தால் அதன் போக்கே தனி. மனிதனின் தீர்க்கமான கூரான நினைவுகள், திட்டங்கள் எல்லாம் அவனுடைய ஏதாவதொரு பிரயானத்தின் போது தான் உருவாகின்றன போலும். பிரயானத்தின் போது வருகிற சிந்தனைகள் வைகறையின் பனி புலராத மலர்களைப் போல் புதுமையாகவும் பொலிவாகவும் அமைகின்றன.


- நா. பார்த்தசாரதி (நெற்றிக்கண்)

வாழ்க்கையின் சௌகரியங்களுக்குத் தன்னை வளைத்துக் கொள்ளாமல் நம்முடைய அசௌகரியங்களுக்கு ஏற்றபடி வாழ்க்கையை வளைத்துக் கொள்ள வேண்டும். 


- நா. பார்த்தசாரதி (நெற்றிக்கண்)

ஒரு சொல்லுக்கு இரண்டு ரூபங்கள் உண்டு. சொல் தனக்குத்தானே ஒரு வடிவம். இரண்டாவதாக சொல் தன்னால் குறிக்கப்படுவது எதுவோ அதுவாக மாறிக் கருவியாக நின்று அதையே உணர்த்துவது மற்றொரு வடிவம். பார்க்கப்போனால் இந்த இரண்டு வடிவமும் வேறு வேறல்ல. ஒன்றே மற்றொன்று.ஒன்றிலிருந்து மற்றொன்று. ஒன்றாயிருந்தது மற்றொன்று.

- நா. பார்த்தசாரதி (நெற்றிக்கண்)
பக்தியின் காரணமாக ஏற்படுகிற பயத்தையாவது ஒப்புக் கொள்ளலாம். வெறும் பயத்தின் காரணமாக மட்டுமே ஏற்படுகிற பக்தியை ஒப்புக் கொள்ள முடியாது.

- நா. பார்த்தசாரதி (சுந்தரக் கனவுகள்)
சாதாரன மனிதர்களின் வேதனைதான் அவர்களுடைய தவம். எல்லோரும் தவம் செய்யக் காட்டுக்குள் போய் விட முடியாது. பலருக்கு அவர்கள் படுகிற வேதனைகளும் துக்கங்களும் அடைய வேண்டியதை அடைவிக்கிற தவமாக இருக்கும்.



- நா. பார்த்தசாரதி (நெற்றிக்கண்)
அன்பினால் மனிதர்களை ஓற்றுமைப்படுத்த பல நாள்களாகும் என்றால், பொறாமையால் அவர்களைப் பிரித்துவிட மிகச்சில விநாடிகளே போதுமானது. 


- நா. பார்த்தசாரதி (சுந்தரக் கனவுகள்)

எவன் ஒருவன் தன்னைத் தூய்மையானவனாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறானோ, அவன் காமத்திலிருந்தும், மற்றும் சரீர வாழ்க்கையின் சம்பந்தமான ஆசாபாசங்களில் இருந்தும் விடுபடல் வேண்டும். அந்த ஒழுக்க தூய்மையின் பொருட்டு, செல்வத்தையும், அதிகாரத்தையும், அவன் துறக்க தயாராக இருத்தல் வேண்டும்.


- ஜெயகாந்தன் (இமயத்துக்கு அப்பால்)

ஒரு வசதி இல்லாமல் போவதை விட, அந்த வசதி கிடைக்காமல் ஏமாற்றப் படுவது மோசமானது. அடக்குமுறையின் அடையாளம் ஏமாற்றுவது என்றால், அடிமைத்தனத்தின் முதல் அடையாளம் ஏமாறுவதுதான். 


- நா. பார்த்தசாரதி (சுந்தரக் கனவுகள்)
ஒரு காரியத்தை முதலில் செய்து விடுவது எத்தனை பெரிய சிரத்தையோ அத்தனை பெரிய சிரத்தைதான், அதைக் கடைசியில் செய்வதற்காகத் தனியே மீதம் வைத்திருக்கோம். கடைசியாக செய்ய வேண்டுமென்று பிரித்து ஒதுக்கி வைப்பதாலேயே சில காரியங்களுக்கு முதன்மையும் முக்கியமும் சிரத்தையும் உண்டாகிவிடுகிறது.

- நா. பார்த்தசாரதி (நெற்றிக்கண்)
வசதி உள்ளவர்களின் கேவலங்கள் சகித்துக்கொள்ளப்படும் அதே சமயத்தில், வறுமையாளர்களின் கேவலங்களை அருவருப்போடு பார்க்கிற உலகம் இது.

- நா. பார்த்தசாரதி (சுந்தரக் கனவுகள்)
நம்மை தொடர்ந்து யோக்கியர்களாக வைத்துக் கொள்ள வேண்டுமானால், நாம் அயோக்கியர்களை விரோதித்து கொள்வதை தவிர்க்கவே முடியாது - கூடாது.

- நா. பார்த்தசாரதி (சுந்தரக் கனவுகள்)
இங்கு எதுவும் படிக்காத பாமரர்களை ஒன்று சேர்ப்பது கூட சுலபம். நன்கு படித்தவர்களையும், அரை குறையாய் படித்தவர்களையும் ஒன்று சேர்ப்பது தான் இந்நாட்டில் மிகவும் சிரமமான காரியம்.


- நா. பார்த்தசாரதி (சுந்தரக் கனவுகள்)
தவறுவதும், தவற நேர்வதும் ஒன்றில்லை. தவறுகிறவர்களைத் திருத்துவது கடினம். தவற நேர்கிறவர்களை மன்னிக்கலாம்; மன்னிக்க முடியும்.


- நா. பார்த்தசாரதி (சுந்தரக் கனவுகள்)
ஏழைகளும், மத்தியத்தர குடும்பத்தினரும்தான் பிரதிபலன் பாராமல் அன்புக்காகவும் உபசாரத்துக்காகவும் மனிதர்களைப் போற்றவும், விருந்து வைக்கவும், புகழவும் செய்கிறார்கள்.


- நா. பார்த்தசாரதி (நெற்றிக்கண்)
படித்தவர்கள் எல்லாம் பண்பட்டவர்களாகவோ; பண்பட்டவர்கள் எல்லாம் படித்திருப்பவர்களாகவோ தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.


- நா. பார்த்தசாரதி (சுந்தரக் கனவுகள்)